The website dedicated to tribal welfare to provide healthcare with medical treatment and impart education to the tribals

JEEVA schedule tribe's hospital
ஜீவா பழங்குடி மக்கள் மருத்துவமனை

Donate for a cause

வாழும் தொன்மங்களான மலைவாழ் பழங்குடி மக்கள் மனிதகுலத்தின் பாரம்பரிய வேர்கள். கண்ணுக்குத் தெரியாத வேர்கள் மாவிருட்சங்களைத் தாங்கி நிற்பது போல, செழித்த, பகட்டான நவீன மனிதகுலத்தைத் தாங்கும் மறைந்து கிடக்கும் வேர்கள் பழங்குடிகள். மழையிலும் வெய்யிலிலும் அழிவின்றி நிற்கும் மலைகள் போல, வறுமை, சோதனை, அத்தனையும் தாங்கி வாழ்ந்து வருகிறார்கள்.

நவீன வாழ்வின் அனைத்து வசதிகளும் மறுக்கப்பட்டு வாழ்ந்து வரும் பழங்குடிகளின் வாழ்வு, அவர்களின் பாதுகப்பு அரண்களான வனங்களினுள்ளும் ஆக்கிரமிக்கப்பட்டு அழிவுக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. சுற்றிலும் நெருப்பு, நடுவிலே கற்பூரம் போன்றுதான் அவர்கள் வாழ்க்கை உள்ளது. காடுகளின் ஊடாகச் சாலைகள், அவற்றில் கார்கள் பறக்கின்றன. காடுகளை அழித்துத் தோட்டங்கள், வீடுகள், தொழிற்சாலைகள், பங்களாக்கள் நிமிர்ந்து நிற்கின்றன. தொலைபேசி, தொலைக்காட்சி, செல்போன், சினிமா சூட்டிங் என எவர் அனுமதியும் இன்றி நுழைகின்றன.

ஆனால் நூற்றாண்டுகளாக மாறாத குடிசைகள், அரை நிர்வான ஆடைகள், கானுயிர்களிலிருந்து பெரிதும் மாறிவிடாத உணவு, சுற்றி உருவான நவீனங்களின் கழிப்பால் மாசுபட்டுப் போன குடிநீர், நோய்கள் எனப் பழங்குடி மக்கள் வாழ்வு நாளுக்கு நாள் சீர்கெட்டு, பாழ்பட்டு வருகிறது. கல்வி இல்லை, சுகாதாரம் இல்லை, உணவு இல்லை, வருவாய் இல்லை என இல்லைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குறைந்த பட்ச பாதுகாப்பான வாழ்வு, ஆரோக்கிய சூழல், நோய்களிலிருந்து பாதுகாப்பு இவற்றை வாழும் பழங்குடி மக்களுக்குத் தர வேண்டியது நவீன உலகின் கடமை.

நவீன வாழ்வின் வசதிகளைப் பெற்ற மனசாட்சியுள்ள மனிதாபிமானிகள் சிலர் ஆல்பர்ட் ஸ்விட்சர் காலம் துவங்கி ரெஜி, லலிதா வரை தனித்தனியாக ஆதரவற்ற பழங்குடி மக்களின் நல்வாழ்வுக்காக சில முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டு மக்கள் தொகையில் 8% விழுக்காடாக உள்ள பழங்குடிகள் சிறு சிறு குழுக்களாக நாடு முழுவதும் மனிதக் காலடிகள் படாத வனாந்தரங்களில் இயற்கையின் கருணையை மட்டும் நம்பி வாழ்ந்து, மடிந்து வருகிறார்கள்.

வயது வந்த ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கு எனும் ஜனநாயகம் அவர்களை எட்டவில்லை. காடுகளில் ஊடாகச் செல்லும் கருத்த சாலைகளிலிருந்து விலகி, அடர்ந்த காடுகள் நடுவே ஒற்றையடிப் பாதையில் குறுக்கிடும் வன விலங்குகளைக் கடந்து 10-15 கல் தொலைவிலுள்ள சிற்றூர்களில் சூரியனுடன் விழித்து சூரியனுடன் மறையும் அவர்களின் நாட்கள். எல்லோர்க்கும் நியாயம் வழங்கும் அரசு நியாய விலைக் கடைகள் இவர்களைத் தேடிச் செலவில்லை. 2 ரூபாய் அரிசியைத் தேடி, மலிவான மண்ணெண்ணெய் வாங்க இவர்கள் மைல்கணக்காக நடந்து, சுமந்து வர வேண்டும். இவர்களைத் தேடிச் சென்று குறைந்த பட்ச உணவுப் பாதுகாப்பைத் தர இந்திய ஜனநாயகம் முன்வர வேண்டும். கம்பும், ராகியும் மட்டும் களியாக தினம் தின்னும் இவர்கள் சமவிகிதச் சத்துணவு இன்றி வாடுவதை மாற்ற முயல வேண்டும்.

நூற்றாண்டுகள் முன் நாட்டைச் சுரண்ட வந்த வெள்ளையர்கள் கூடப் பழங்குடி மக்கள் பற்றி ஆய்வுகள் நடத்தி, அவர்கள் பற்றிய ஆவணங்களை உருவாக்கி, பதிவு செய்து, அவர்களிடம் உள்ள வினோதமான 'சிக்கில்செல் அனிமாயா'வைக் கண்டு பிடித்தனர். விடுதலை பெற்று அரை நூற்றாண்டான பின்னும் அவர்களுக்கு விடிவு பிறக்கவில்லை. பல கோடி செலவில் பழங்குடி ஆய்வு மையங்களால் எவ்வித மாற்றமும் தர முடியவில்லை. ரத்தசோகையிலிருந்து பழங்குடி மக்களை விடுவிப்பது நலவாழ்வில் அடித்தளமாகும், உடனடித் தேவையாகும்.

நமது நதிகளையும், நீர் நிலைகளையும் மாசுபடுத்தும் வளர்ச்சி நாயகர்களின் மற்றுமொரு புதிய வணிகப் பொருளாகிப் போனது குடிநீர். நம் அறிவுக் கொழுந்துகளை அமெரிக்காவுக்கு விற்று விட்டு, அவன் நமக்கு அக்வாபீனோ தண்ணீரைப் பால் விலையை விட அதிகமாக விற்க அனுமதிக்கிறது நமது மக்கள் அரசுகள். ஆனால் யானையும், காட்டுப் பன்றியும் குடித்துக் கலக்கிய நீரைப் பகிர்ந்துண்டு வாழும் பழங்குடி மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீரையாவது குறைந்த பட்சம் உறுதி செய்ய வேண்டும் நமது ஜனநாயகம்.

நமது கல்விக் கூடங்கள் சிலிகான் வேலிக்குத் தேவையான அறிவு அடிமைகளைத் தயார் செயது அனுப்புகின்றன. ஆனால் வனங்களில் காண்ட்ராக்ட் லாபத்திற்காகக் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடங்கள் மட்டும் உண்டு. ஆசிரியர்கள் வரமாட்டார்கள். பாடம் நடக்காது. தேர்வின்றித் தேர்வு பெறுவார்கள். பள்ளிக்கூடம் போகாமலே பாடமேதும் படிக்காமலே பாஸ் பாஸ் தான். பழங்குடிக் குழந்தைகளுக்கு ஐ.ஏ.எஸ். கல்வி வேண்டாம். குறைந்த பட்சம் நலவாழ்வுக்கான கல்வியாவது தர வேண்டும் கல்வித்துறை.

பல் துலக்குவது, நகம் வெட்டுவது, மலம் கழிந்த பின் கை கழுவுவது, குளிப்பது, தலைசீவுவது, தூய ஆடை அணிவது, மலிவான கீரை, காய்கறி, பழங்களில் உள்ள சத்தை அறிந்து சமச்சீர் சத்துணவு உண்பது இவற்றை ஒவ்வொரு குழந்தையும் அறியச் செய்யும் அடிப்படைக் கல்வி தரட்டும் அரசு.

பழங்குடி மக்களிடம் பெரிதும் காணப்படும் நோய்கள் ரத்த சோகை, மலேரியா, தோல் வியாதிகள், பல் சொத்தை, நீர்வழியாக உண்டாகும் வயிற்றுப்போக்கு, பூச்சித் தொல்லை போன்றனவே. இதற்கு 30 ஆண்டுகள் படித்த மேல் தட்டு MBBS டாக்டர்கள் அடர்ந்த வனக்கிரமங்களுக்கு வந்து தங்கி வைத்தியம் செய்வார்கள் என எதிர்பார்ப்பது மடமையே. பத்தாவது வரை படித்த பழங்குடி ஆணை, பெண்ணை அடிப்படை நலவாழ்வு சேவகராக ஓராண்டு காலம் பயிற்றுவித்து, வெறுங்கால் டாக்டர்களாக்கி விட்டால், ஒரு பழங்குடி இளைஞருக்கு வேலை, பல நூறு பழங்குடி மக்களுக்கு மருத்துவம் உறுதி செய்யப்பட்டு விடும். சோகைக்கு இரும்புச்சத்து மாத்திரை, காய்ச்சலுக்கு பாரசிடமால், மலேரியா, குளிர்க் காய்ச்சலுக்கு க்ளோரேக்வின், வயிற்றுப்போக்குக்கு மெட்ரோனிடசால், வயிற்றுப் பூச்சித் தொல்லைக்கு மெபன்டசால், தோல் வியாதிக்கு க்ரிசோபொல்லின் என எண்ணி 10 மருந்துகளை மட்டும் பயன்படுத்தப் பயிற்றுவித்து விட்டால், பாதி நோய்களிலிருந்து இந்த அபாக்கியவான்கள் விடுதலை பெற்று விடுவர். இதற்குக் கட்டுப்படாத நோய் உள்ளவர்களை இந்த அரசு மருத்துவமனைக்கு வெறுங்கால் டாக்டர்கள் பரிந்துரை செய்யலாம்.

கருவுற்ற பெண்கள் சொட்டுச் சிறுநீரில் சில நொடிகளில் கண்டறியும் எளிய பரிசோதனை, ரத்தசோகையை சொட்டு ரத்தத்தில் கண்டறியும் பரிசோதனைகளைச் செய்ய விரிவாகப் பசிசோதனைச் சாலைகள், தேர்ந்த வல்லுனர்கள் தேவையில்லை. எளிய மருத்துவப் பரிசோதனைச் சாதனங்கள் மருத்துவமனையற்ற மலைகளுக்குத் தேவை. கரு வளரும்போது சாப்பிட வேண்டியவை, போடவேண்டிய தடுப்பூசிகள், பிரசவத்திற்கு அறுவை சிகிச்சையற்ற அணுகுமுறை ஆகியவற்றை அருகில் உள்ள அரசு மருத்துவமனை ஊழியர்கள் உதவியுடன் கூடியவரை ஆபத்தின்றிச் செய்துவிட முடியும்.

பெண்களின் பெரும்பாலான நோய்களுக்குச் சுகாதாரமான வாழ்க்கை முறையே பெரும் மருந்தாகிவிடும். மாதவிலக்குக் காலத் தூய்மைக்கு கிராம மருத்துவ ஆலோசகர் வழிகாட்டுதல் உதவும்.

பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால், சத்துணவு, தடுப்பூசிகள் போன்றவற்றைக் கற்றுக் கொடுத்துவிட்டால் சிசு மரணங்கள் வெகுவாகக் குறைந்துவிடும்.

இதையெல்லாம் அரசு செய்து தருவது நல்ல அரசின் கடமை, நல்ல அரசு ஊழியர்கள் கடமை. ஆனால் உரிமைகள் அளவுக்குக் கடமைகள் உணரப்படாத சூழலில் மனசாட்சியுள்ள மனிதர்கள், தொண்டு நிறுவனங்கள் குறைந்தபட்ச மருத்துவ அறிவுடன் உயர்ந்தபட்ச மனிதாபிமானத்துடன் உன்னத சேவை செய்ய முடியும் என்பதற்குத் தருமபுரி மாவட்ட சிட்லிங்கியின் டாக்டர்கள் ஒரு உன்னத உதாரணம்.

கிறித்தவ சேவை நிறுவனங்கள் தாளவாடி போன்ற மலைக் கிராமங்களில் மதரீதியில் நல்ல சேவை செய்துவருகின்றன. மதம் கடந்த மனித நேயத்துடன் 'சிட்லிங்கி மாதிரி'யை முன்னோடியாகக் கொண்டு ஒவ்வொரு மலைப் பகுதியிலும் அம்மக்களுக்காக உதவிவரும் தொண்டு நிறுவனங்களை இணைத்து ஒரு செயல்பாட்டுத் திட்டத்தை உருவாக்க முயன்றால் பழங்குடி மக்கள் பெரிதும் பயன்பெறுவர். முற்றிலும் இலவசம் என்பது இன்றைய சூழலில் இயலாத ஒன்று. தொடர்ந்த செயல்பாட்டுத் தேவைக்கு உதவும் கட்டணம், குறைந்தபட்ச மருந்துகள், குறைந்தபட்ச மருத்துவ அறிவு கொண்ட கிராம மருத்துவ சேவையாளர்கள், வெறுங்கால் டாக்டர்கள், அடிப்படை நலவாழ்வுக் கல்வி தரும் பயிற்சி, சத்துணவு எவை என அறிந்து பெறும் அறிவு இவை கொண்ட ஒரு கிராம நலவாழ்வுச் செயல்பாட்டு மாதிரியை ஒவ்வொரு மலையிலும் உருவாக்க கூட்டுறவுச் செயல்பாடு உடனடியாகத் துவங்குவது ஒன்றே நமது பாரம்பரிய வேர்களான பழங்குடி மக்களுக்கு வசதி பெற்ற நவீன சமூகம் செய்ய வேண்டிய கைம்மாறாக அமையும்.

இத்தகைய லட்சியத்துடன் விடுதலைப் போராளியும், தன்னலமற்ற பொதுவுடமைச் சிந்தனையாளருமான தோழர் ப. ஜீவானந்தத்தின் நூற்றாண்டு விழா நினைவாக ஈரோடு மாவட்டம், அந்தியூர் மலைப்பகுதி, தாமரைக்கரை வனகிராமத்தில் ஒரு மருத்துவ சேவை மையம் அமைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. சுற்றுவட்டார 20 கிராமங்களின் அடிப்படை மருத்துவ சேவைக்கான வசதிகள் கொண்ட இம்மையம் உருவாக்கி நடத்த சுமார் 25 லட்சம் நிதி தேவை. நம்பிக்கையுடன் துவக்கப்பட்டு ஏப்ரல் 2008ல் செயல்பட உள்ளது இம்மையம். நல்லோர்களின் அறிவார்ந்த வழிகாட்டுதலையும் துணையிருப்பையும் பொருள் உதவிகளையும் வேண்டுகிறது.

தொடர்பிற்கு:

மருத்துவர் வெ. ஜீவானந்தம் M.B.B.S., D.A
175 பழனி ஆண்டவர் கோவில் தெரு, பவானி - 638 301
ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
அலைபேசி: 09442755120 - 09443772116
மின்னஞ்சல்: jeeva@healthcareall.org


Designed and maintained by AKR Consultants